×

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்; விவாகரத்து பெற்ற மகளை வாத்தியங்கள் முழங்க வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை; உத்தரபிரதேசத்தில் விநோதம்

கான்பூர்: விவாகரத்து பெற்ற மகளை அவரது கணவர் வீட்டில் இருந்து வாத்தியங்கள் முழங்க தனது வீட்டிற்கு அழைத்து வந்த தந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர். டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் இன்ஜினியராக பணியாற்றி வரும் அனில் குமார் என்பவரின் மகள் ஊர்வி (36) என்பவருக்கும், கணினி பொறியாளருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. டெல்லியில் வசித்து வந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஊர்வியின் மாமியார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் ஊர்வி வழக்கு தொடர்ந்தார். விசாரணைகள் முடிந்த நிலையில், தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

இந்நிலையில் ஊர்வியின் தந்தை அனில்குமார், தனது மகளை கான்பூரில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்தார். திருமண கோலத்தில் தனது மகளை மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தது போன்று, விவாகரத்து ஆன பின்பும் மகளை மகிழ்ச்சியாக வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று நினைத்தார். அதற்காக ‘டிரம்ஸ்’ வாத்தியங்கள் முழங்க தனது வீட்டிற்கு மகளை அழைத்துவந்தார்.

இதுகுறித்து ஊர்வியின் தாயார் குசும்லதா கூறுகையில், ‘எனது மகள் மற்றும் பேத்தியுடன் வாழ விரும்புகிறேன். தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டதால், எனது மகள் ஊர்வி இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என்று நினைத்தோம். ஆனால் அவர் தனது தந்தையின் நோக்கத்தை புரிந்துகொண்டார். தந்தையின் மனநிலையை புரிந்து கொண்ட அவர், தனது புதிய வாழ்க்கையை தொடங்கும் முன் கொஞ்சம் நாள் மகள் ஓய்வு எடுக்க வேண்டும்’ என்றார். விவாகரத்து பெற்ற மகளை அவரது கணவர் வீட்டில் இருந்து வாத்தியங்கள் முழங்க தனது வீட்டிற்கு அழைத்து வந்த தந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

The post வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்; விவாகரத்து பெற்ற மகளை வாத்தியங்கள் முழங்க வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை; உத்தரபிரதேசத்தில் விநோதம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,KANPUR ,Anil Kumar ,Palam Airport ,Delhi ,Strange ,
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...